தெலங்கானாவில் ஒரு திருப்பதி.. ரூ.1,800 கோடியில் கோயில்
ஆந்திர மாநிலத்தில் திருமலையில் குடிகொண்டு அருள் பாலித்து வருபவர் ஏழுமலையான். இதேபோன்று தெலங்கானா மாநிலம், யாதாத்ரி பகுதியில் யாதாத்ரி குட்டா எனும் இடத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று புதுப்பிக்க வேண்டுமென தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் விரும்பினார். இதன் காரணமாக இக்கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மூடப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. இக்கோயிலை சுற்றிலும் உள்ள 7 கிராமங்களை அரசு கையகப்படுத்தியது. மொத்தம் 14,000 ஏக்கரில் இங்கு சுற்றுலா மையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆன்மீக சொற்பொழிவு மையங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள், பஸ் நிலையம், அரங்குகள், உட்பட அனைத்து வசதிகளும் உருவாகி வருகிறது. கோயில் மட்டும் 11 ஏக்கரில் உருவாகி வருகிறது. இதில் முகப்பு ராஜ கோபுரம் மட்டும் 9 நிலைகளுடன் 100 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பார்கள் என்றும், ஆண்டு வருமானம் ரூ. 200 கோடியை தாண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் 2.7 கி.மீ தொலைவிற்கு கிரிவலம் செல்ல வசதியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலையும் புதுப்பிக்கப்பட்டு, குடிநீர் குழாய்கள், கழிப்பறை வசதிகள், மின் வசதி போன்றவை செய்யப்பட்டு வருகிறது.
Leave a Comment