அண்ணாமலையின் குண்டுக்கண்ணன்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகில் பூதநாராயணப்பெருமாள் என்னும் பெயரில் 'குண்டு கிருஷ்ணர்' அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: குழந்தை கிருஷ்ணனால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், அவனைக் கொல்ல பூதனை என்ற அரக்கியை அனுப்பி வைத்தான். அவள் ஒரு அழகியாக உருவெடுத்து, கிருஷ்ணரை வாரி அணைத்து பாலூட்டினாள். கிருஷ்ணனும் பால் குடிப்பது போல நடித்து அவளது உயிரையே குடித்து விட்டார். ஆனாலும் தனக்கு அவள் பாலூட்டியதால், அந்த தாய்மை உணர்வுக்கு மதிப்பு அளித்து அவளது பெயரை தன்னுடன் இணைத்து 'பூத நாராயணர்' என்று பெயர் பெற்றார். பெயருக்கேற்ப இவர் குண்டாக இருப்பார். மன்னர் ஒருவர், இந்த கிருஷ்ணருக்கு கோயில் கட்டினார். அது மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில் பக்தர் ஒருவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர், பூமியில் புதைந்த இடத்தை உணர்த்தினார். சிலை கண்டெடுக்கப்பட்டு மீண்டும் கோயில் கட்டப்பட்டது. பெரிய கிருஷ்ணர் குழந்தை கிருஷ்ணர் இடது காலை மடித்து வலது காலை தரையில் குத்திட்டு அமர்ந்து இருக்கிறார். வலது கையில் சங்கு உள்ளது. இடதுகை அருள் புரியும் விதத்தில் அபய முத்திரை காட்டுகிறது. குழந்தை வரம் கிடைக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து துளசி மாலை அணிவிக்கின்றனர். நல்லறிவு தருபவர் கோபம், பொறாமை, காமம் போன்ற தீய குணங்களையே அரக்கர், அரக்கிகளாக புராணங்களில் உருவகம் செய்துள்ளனர். இறை வழிபாட்டின் மூலம் இந்த தீய எண்ணங்களை போக்க முடியும். கிருஷ்ணர் அரக்கியை வதம் செய்தவராக இங்கு இருப்பதால், தீய குணங்கள் மறைந்து பக்தர்களுக்கு நல்லறிவு உண்டாகும்.
கிரிவலம்: கிரிவலம் செல்வோர், இவரது சன்னதியில் தொடங்கி பின் இவரது சன்னதியிலேயே நிறைவு செய்வது சகல நன்மையையும் தரும். இங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி, கோயில் வாசலில் கொட்டுவர். கிரிவலம் சென்ற பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பிப்பதாக ஐதீகம்.
சிறப்பம்சம்: கருடாழ்வார், தும்பிக்கைஆழ்வார், ஆஞ்சநேயர், சுதை ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. பயம் நீங்க, வெற்றி கிடைக்க சக்கரத்தாழ்வாருக்கு புதன்கிழமையில் துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருவோணம், பவுர்ணமி நாட்களில் அபிஷேகம் நடக்கும்.திருவண்ணாமலையிலுள்ள பழமையான பெருமாள் கோயில் இது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். புரட்டாசி கடைசி சனியன்று அன்னதானம் உண்டு. எப்படி செல்வது: அண்ணாமலையார் கோயில் வடக்கு மாட வீதியில் உள்ளது.
Leave a Comment