கஷ்டங்கள் தீர்க்கும் கந்தசாமி


போக்குவரத்து நெரிசல்மிக்க இன்றைய சென்னையிலும் அமைதி தவழும் சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் எனப்படும் கந்தசாமிக் கோயில்.


பாரிமுனை ராசப்ப செட்டித் தெருவில் அமைந்துள்ள இந்த கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வேலூர் மாரி செட்டியார் என்பவர்தான் இந்த கோயில் உருவாகக் காரணமானவர். கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகராக இருந்த மாரி செட்டியார், ஒரு தீவிர முருக பக்தர். அவர் திருப்போரூரில் உள்ள முருகனை அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக கிருத்திகை நாளில் கண்டிப்பாக திருப்போரூரில் இருப்பாராம்.

அப்படி ஒருமுறை அவர் தனது நண்பர் கந்தப்பா ஆசாரியுடன் திருப்போரூர் சென்றபோது, ஒரு இடத்தில் ஓய்வெடுத்தாராம். அப்போது தெய்வத்தின் அருளால் அவர்களுக்கு அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் இருந்த புற்றுக்குள் இருந்து ஒரு முருகன் சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த சிலையை எடுத்துவந்து ஏற்கனவே முத்தையால்பேட்டையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். இந்த சம்பவம் 1673ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஆங்கிலேயே குறிப்புகளில் காணப்படுகிறது.

இதனிடையே இந்த கோயில் இங்கு எப்படி வந்தது என்பதற்கு கிட்டத்தட்ட இதேபோல ஒரு தல வரலாறு கூறப்படுகிறது. அதன்படி, இந்த பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்து கொண்டிருந்தனர். வழியில் பலத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே,வழியில் ஓர் மடத்தில் தங்கினர். 

அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினாராம். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன், சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அந்த சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமி இந்த இடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள். இதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சரி, மீண்டும் மாரி செட்டியாரிடம் வருவோம். தான் கொண்டு வந்த சிலையை வைப்பதற்காக மாரி செட்டியார் ஒரு சிறிய கோயிலைக் கட்டினார். இதற்காக அவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கான இடம் மட்டும் முத்தையாலு நாயக்கரால் கொடுக்கப்பட்டதாம்.

சுமார் 100 ஆண்டுகள் கடந்த பின்னர் 1780ஆம் ஆண்டில் இந்த கோயில் பதினெண் செட்டியார்களால் திருத்தி அமைக்கப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்த பிறகு, 1860இல்தான் இந்த கோயில் நன்கு விஸ்தரிக்கப்பட்டு கற்கோயிலாக மாற்றப்பட்டது. அதுவரை ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள், இது சாதாரண செங்கற் கோயிலாகத்தான் இருந்தது. 1869ஆம் ஆண்டு வையாபுரி செட்டியார் என்பவர் இந்த கோயிலுக்கு ரூ66,000 நன்கொடையாக வழங்கினார். அவர் இந்த கோயிலுக்காக ஒரு தேரும் செய்ய வைத்ததாக நரசய்யா தனது மதராசபட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

1880ஆம் ஆண்டு அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் என்பவர் நாராயண செட்டியாருடன் இணைந்து கோயிலின் அருகில் இருந்த நிலத்தை கோயிலுக்காக அளித்தார். அந்த நிலத்தில் தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1901ஆம் ஆண்டு காளி ரத்தின செட்டியார் என்பவர் ரூ.50,000 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்த காசில்தான் கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதுமட்டுமின்றி கோயிலுக்காக காளி ரத்தினம் செட்டியார் ஒரு கிண்ணம் நிறைய வைரங்களும், விலை உயர்ந்த கற்களும் கொடுத்தாராம்.

இந்த கோயிலுக்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வள்ளலார் சென்னையில் வசித்த போது தமிழ் கற்பதற்காக இந்த கோயிலுக்கு அருகில் உள்ள சபாபதி முதலியார் வீட்டுக்கு வருவார். பல நேரங்களில் தமிழ் கற்கப் போகாமல் முருகனைத் தரிசிக்கக் கோயிலிலேயே தங்கிவிடுவாராம். மன முருகிப் பாடலும் பாடுவார்.

திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள ‘ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்ற பாடலில் கந்த கோட்ட முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார். ‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ என்று கந்த கோட்டத்து முருகனை புகழ்ந்து பாமாலை சூட்டியுள்ளார். வள்ளலாரைப் போன்றே சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் போன்றோரும் இங்கு வந்து பாடியுள்ளனர்.

இந்த கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே மெட்ராசின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்களாம். கந்த சஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

8 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கோயிலில் சரவண பொய்கை என்ற பெயரில் ஒரு அழகிய குளம் இருக்கிறது. இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதில் உள்ள நீரின் அளவு கூடாமல், குறையாமல் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். இந்த குளத்தில் கை நிறைய பொறியை அள்ளி வீசினால், மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொறியை கவ்விக் கொண்டு மின்னல் வேகத்தில் நீருக்குள் மறைகின்றன. இங்கு ஒவ்வொரு முறை வரும்போதும், அந்தக் கால மெட்ராஸ் பற்றிய எனது நினைவுகளும் இந்த மீன்களைப் போலவே மூளை நியூரான்களில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஒரே நேரத்தில் பாயும் பரவசத்தை அனுபவிக்க முடிகிறது



Leave a Comment