முருகனின் பெருமைகள் கூறும் அறுபடை வீடுகள்
தமிழ் கடவுளான முருகபெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் அவரின் அறுபடை வீடுகளின் சிறப்புகளைப் பற்றி , இப்பதிவில் காண்போம் .
திருப்பரங்குன்றம்:
ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாக போற்றப்படுவது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகும் . இங்கு அழகுக்கு இலக்கணமாக உருவகப்படுத்தப்படும் முருகப்பெருமான் அழகிய மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற கையோடு , இந்திரனின் மகளான தெய்வானையை இந்த தலத்தில் திருமணம் செய்து கொண்டார். அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது வேறு எங்கும் காண இயலாத ஒன்றாக சொல்லப்படுகிறது .
அசுரர்களிடம் சிறைப்பட்டிருந்த தேவேந்திரனையும், தேவர்களையும் , தாய் சக்தியின் அம்சமான வேலைக் கொண்டு சிறை மீட்டார் முருகன் . அதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை , போரில் வெற்றி பெற்ற மறுநாள் முருகனுக்கு இத்தலத்தில் திருமணம் செய்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
திருச்செந்தூர்:
முருகனின் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் கடலோரத்தில் அலைகளின் ஓங்கார சப்தத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது . முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்காக ,போருக்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். திருச்செந்தூரில் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்றதால் , கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது . அவர் போர் புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டி என்பதால் , கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது .
போரின் முடிவில் பெரிய மரமாக நின்ற சூரபத்மனை முருகன் இரண்டாக பிளக்கிறார் . அதில் ஒரு பாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார் சேவற்கொடியோன் .
பழநி:
வாழ்க்கையின் தாத்பரியத்தை மக்களுக்கு உணர்த்திய சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி . போகர் என்ற சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட இத்தலத்தின் முருகன் சிலையின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட நோயும் தீரும் என்பது நம்பிக்கை . நாரத முனி கொண்டு வந்த ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி.
சுவாமிமலை சிவகுருநாதன்:
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைக்கிறார் முருகன் . அதற்கு விளக்கம் கேட்ட சிவனுக்கு , உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை. அதனால் தான் இத்திருத்தலத்தில் ‘சிவகுருநாதன்’ என்ற பெயரோடு அருள் தருகிறார் முருகன்
திருத்தணி முருகன்:
சூரனுடன் போரிட்ட போது மார்பில் ஏற்பட்ட காயத்தின் தடத்துடன் இங்கு காட்சியளிக்கிறார் முருகன் . திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ,இத்திருத்தலத்தில் கோபம் தணிந்து சாந்தமானார் . முருகனின் கோபம் தணித்த இடம் என்பதால் இவ்வூர் ‘தணிகை ‘என பெயர் பெற்றது . இத்தலத்தில் பிரசாதமாக தரப்படும் அபிஷேக சந்தனத்தை பக்தர்கள் நீரில் கரைத்து குடித்தால் அவர்களின் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகன் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி.
பழமுதிர்ச்சோலை :
குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும். தன்னை வழிபடுபவர்களுக்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக இத்திருத்தலத்தில் அருள் புரிகிறார் முருகன் .
முருகா ...முருகாவென்றால் உள்ளம் உருகாதா என்ற வரிகளுக்கு ஏற்ப , தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவைகளை , அவர்கள் உள்ளம், நன்றியில் உருகும் வண்ணம் நிறைவேற்றிக்கொடுப்பவனே வெற்றிவேலன் .
Leave a Comment