முக்திதரும் குமரக்கோட்டம்.....
அறிவால் அறிந்து உன்னிரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!
ஆறுமுகனே உன் தாள் சரணம்!
படைப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நினைத்த பிரம்மதேவர், சிவபெருமானை தரிசித்து ஆலோசனை கேட்பதற்காக கயிலைக்கு வந்தார். அவசரமான காரியம் என்பதால், விரைந்து சென்ற அவர், முருகப்பெருமான் இருந்ததைக் கவனிக்காமல் கடந்து சென்றார். லீலைகள் செய்வதில் விருப்பம்கொண்ட பாலமுருகன் நான்முகனை வழிமறித்தார். விரைந்து செல்லும் காரணம் கேட்டார். அப்படியே பேச்சு நீள, பிரணவத்தைக்கொண்டே தாம் படைப்புத் தொழிலைச் செய்வதாக பிரம்மன் கூறினார்.
பிரணவத்தின் பொருளை முருகன் கேட்க, நான்முகன் விழித்தார். பொருள் தெரியாமல் தலைகுனிந்தார். சுட்டிக் குழந்தையான முருகன், படைக்கும் கடவுளான பிரம்மன் தலையில் குட்டி, அவரைச் சிறையில் அடைத்தார். அதுமட்டுமா? தானே படைக்கும் தொழிலையும் மேற்கொண்டார்.
நான்முகனின் இந்த நிலையை தேவர்களின் வழியே அறிந்துகொண்ட சிவபெருமான் முருகனைக் கண்டித்து, நான்முகனை சிறையிலிருந்து மீட்டார். பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம் என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான்.
தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முருகர் வழிபட்ட ஈசன் சேனாபதீஸ்வரர் என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் சேனாபதீஸ்வரம் என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் மாவடி கந்தன் எனப் பெயர் பெற்றார்.
ஈசனை, தவ வேடத்தில் முருகப்பெருமான் வழிபட்டதால் இங்கு வள்ளி, தெய்வயானை சந்நிதிகள் தனியே உள்ளன. முருகப்பெருமானும் நான்கு கரங்களுடன் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி தவக்கோல மூர்த்தியாகக் காட்சிதருகிறார். குமரக்கோட்ட முருகப்பெருமான் முக்திதரும் மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உலா மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இந்த மூர்த்தியை தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். அதுபோலவே வள்ளி, தெய்வயானை உலா மூர்த்தத் திருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி உள்ளன.
வைகாசி விசாகமும், ஐப்பசி கந்தசஷ்டித் திருவிழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. தீபாவளி நாளைத் தவிர இங்கு எல்லா நாள்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அதில் தேன் அபிஷேகம் விசேஷமானது. இந்தக் கோயிலின் சிறப்பான அம்சம் இங்குதான் கந்தபுராணம் அரங்கேறியது என்பதுதான். காஞ்சியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாசார்யார் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தன்னைப் பற்றிப் பாடுமாறு பணித்தார். திகட சக்கரச் செம்முகம் என்று முதலடி எடுத்துக் கொடுத்து, தமிழின் அழகான காவியமான கந்தபுராணத்தை அரங்கேற்றச் செய்தார் ஆறுமுகப்பெருமான். கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. அதுமட்டுமா? சிறுவனின் வடிவில் வந்து பாம்பன் ஸ்வாமிகளுக்கு வழிகாட்டி ஆட்கொண்ட தலமும் இதுதான்.
Leave a Comment