குழந்தை வரம் அருளும் ஸ்ரீ பிரேமிக விட்டலா பெருமாள்....
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகில் உள்ள விட்டலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரேமிக விட்டலா பெருமாள் ஆலயம். விட்டலா பாண்டுரங்கன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்த கொண்டைய தேவ சோழ மகாராஜாவின் கனவில் தோன்றிய பாண்டுரங்கன் அருள்பாலித்தப்படி, ஆற்றிலிருந்து விக்ரகத்தை எடுத்து வந்து கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்தக் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகா மண்டபம், மற்றும் ஆழ்வார்கள் சன்னதியுடன் உள்ளது. மூலவர் பிரேமிக விட்டலர், கிருஷ்ணர் வடிவத்தில், தாயார் ருக்மணி, சத்தியபாமா இருவருடன் காட்சியளிப்பது, இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
மூலவருக்கு வலது புறத்தில் சந்தான லக்ஷ்மியும், இடது புறத்தில் ராமானுஜர், விஷ்வகேனர் மற்றும் சீனிவாச பெருமாள், லக்ஷ்மி தாயாருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. விட்டலர் விஷ்ணு, சிவன் பதிப்பாக இருப்பதால், இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை விட, சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இக்கோயிலுக்கு வந்து, பக்தர்கள் திரட்டுப்பால் வைத்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தை வேண்டுவோருக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தைகள் கல்வியில் முன்னேற பால் பாயாசம் படைப்பதும் இத்திருத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலிலிருந்து, சதுரங்கப்பட்டினம் வரதராஜபெருமாள் கோயிலுக்கு பாதாள சுரங்க வழி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Comment