கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்
நெல்லை மாவட்ட கோயில்கள்
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்
சிற்ப கலைக்கு சிறந்த சான்று, நெல்லை அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்தான் என்பதை, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தவர்கள் ஏற்றுக்கொள்வர். திருநெல்வேலியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருச்செந்தூர் சாலையில் உள்ளது கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில். இக் கோயில் 16-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.
இக் கோயிலின் தனிச் சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இந்த கோயிலின் வீரப்ப நாயக்கர் மண்டபம், அரங்க மண்டபம் ஆகிய இரு மண்டபங்களிலும் சுமார் 6 அடிக்கு குறையாமல் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.
இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில்தான் உள்ளன. ஒரே தூணில் எண்ணற்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சிற்பங்களில் வீரன், அரச குமாரியை கடத்துதல், குறத்தி அரச குமாரனை கடத்துதல், அர்ச்சுனன், கர்ணன், ரதி, மன்மதன், நடன மங்கை என்று சிற்பக் கலைக்கு பெருமை சேர்க்கக் கூடிய சிலைகள் உள்ளன.
இந்த சிலைகளில் மனிதர்களுக்கு தெரிவதுபோல எலும்பு, நரம்பு, கை, கால் மொளிகள் தெரிவது காண்போரை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. மேலும், மன்மதன் கரும்பு வில் சிற்பத்தின் மேல் பகுதியில் ஒரு ஊசியைப் போட்டால் அதை வில்லின் கீழ் பகுதியில் எடுத்து விடலாம். இந்த அளவுக்கு நுட்பமும், கலைநயமும் நிறைந்த சிலைகள் கிருஷ்ணாபுரத்தில்மட்டும் தான் உள்ளன என்று சிற்பக் கலைஞர்கள் கூறுகின்றனர்.
கிருஷ்ணாபுரம் சிற்பங்கள், இம்மாவட்டத்துக்கு சிற்பக் கலைஞர்களால் அளிக்கப்பட்ட அருள்கொடை என்பதில் ஐயமில்லை. திருச்செந்தூர் சாலையில் பயணிக்கும் யாராக இருந்தாலும், இக் கோயிலின் சிற்பங்களை காணத் தவறுவதில்லை.
இக் கோயிலுக்கு திருநெல்வேலியில் திருச்செந்தூர் செல்லும் அனைத்து பஸ்களும் செல்லும். ரயில் மூலம் செல்பவர்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வேறு வாகனங்கள் மூலமாகவோ, பஸ் மூலமாகவோ கோயிலுக்குச் செல்லலாம். பக்தர்கள் தங்குவதற்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டைப் பகுதியில் விடுதி வசதிகள் உள்ளன.
கோயில் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். அதேபோல மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
Leave a Comment