அம்பை காசிநாதர் திருக்கோயில்


நெல்லை மாவட்ட கோயில்கள்

அம்பை காசிநாதர் திருக்கோயில்

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிற திருக்கோயில் இது. கிழக்கு மற்றும் தெற்குத் திசைகளில் நுழைவாயில்கள். கிழக்குத் திசையில் நுழைவாயிலில் இருக்கும் பிரமாண்ட கதவில் அழகிய சிற்பங்கள் தரிசிக்கக் கிடைக்கின்றன. 

அன்னபூரணி, புன்னைமர கிருஷ்ணன், மகாவிஷ்ணு, சபாபதி, உக்ர நரசிம்மர், பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் என்று ஏராளமான சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது.

தெற்கு நுழைவாயில் அருகே தாமிரபரணி, பிரவாகம் எடுத்து ஓடுகிறது. இங்குதான் மொட்டைக் கோபுரம் அமைந்துள்ளது. கல் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்டமான ஆலயம். தூண்கள் நிறைந்த மண்டபங்கள்; கண்களையும் கருத்தையும் கவரும் சிலா விக்கிரகங்கள்; மண்டபத்தில் பூரணை- புஷ்கலை சமேத ஸ்ரீசாஸ்தா மற்றும் நவக் கிரகங்களுக்குத் தனிச் சந்நிதிகள்.

சற்றே நடந்தால், அர்த்த மண்டபம் தாண்டி ஸ்ரீகாசிநாதரின் கருவறை. சிறிது சாய்ந்த லிங்கத் திருமேனி. சுயம்பு வடிவம். காசியப முனிவர் தொழுத ஈசன். நமசிவாயனை உளமார வணங்கி, அவன் அருள் பெற்றுத் திரும்புகிறோம்.

பிராகாரமெங்கும் நிறைய சந்நிதிகள். அதிகார நந்தி, ஜுரதேவர், சூரிய பகவான், சந்திர பகவான், அறுபத்துமூவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள், அகத்திய மாமுனி, மூஷிக வாகனத்துடன் கன்னி விநாயகர், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர், அண்ணாமலையார், ஸ்ரீசொக்கநாதர்- மீனாட்சி என்று தரிசிக்கலாம்.

பிரம்மோற்ஸவம் என அனைத்து விசேஷங்களும் குறைவின்றி நடைபெறுகின்றன..

நெல்லையிலிருந்து இங்கு வந்துசெல்ல நல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.



Leave a Comment