தென் திருப்பதி... அழகிய நம்பிராயர் கோயில்


நெல்லை மாவட்ட கோயில்கள் - 2

திருப்பதி தெரியும். தென் திருப்பதி தெரியுமா? நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திருக்குறுங்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் கோயில்தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

திருப்பதியைப் போன்றே இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பிராயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

கோடை காலங்களில்  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற புகழ்பெற்ற மலைப் பகுதிகளுக்குச் செல்ல பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் ஆன்மீக ரீதியாகவும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதி என்ற வகையிலும் நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் பயணித்தால் திருக்குறுங்குடியை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக நம்பி மலைக் கோவில் உள்ளது. மனத்துக்கு ரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் சென்றதும், மலைப்பாதை தொடங்குகிறது. 

மேடும், பள்ளமுமாக இந்த மலைப் பாதை பார்ப்பதற்குக் கடினமான தோற்றம் கொண்டிருந்தாலும் மலைக் காடுகளின் பசுமை வாசனையும், குளுமையான மூலிகைக் காற்றும் மலையேறுபவர்களுக்குக் கொஞ்சமும் கூட சோர்வையோ, களைப்பையோ அளிப்பதில்லை. அந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பிரதேசம் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்கிறது.


மலைக்கோவிலில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்க பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வம் காட்டுவது வழக்கம். அனால், பெரியவர்கள்  மலை மீது ஏறிச் செல்ல சிரமப்படுவதால் அவர்களுக்காகவே கீழ் கோவிலில் இருந்து மலைக்கோவில் செல்ல ஜீப் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக 8 பேர் வரை பயணம் செல்லலாம். நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். சிலர் மலையடிவாரம் வரை சென்று காட்டுபாதையில் நடந்தே மலை நம்பி கோவிலுக்கு செல்கிறார்கள்.


பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக் கூட்டங்களின் நடுவில் நம்பினோரைக் கைவிடேன் என கருணையின் பிறப்பிடமாக திருமலைநம்பி வீற்றிருக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலை திருமங்கையாழ்வார் கட்டியதாகக் கூறப்படுகிறது.

ராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானர படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காக தங்கிய இடம் இந்த மலை என்றும் கூறப்படுகிறது. இந்த மலையில் இறைவனின் பாதச்சுவடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

`வைணவ தலத்தின் குரு` என்று அழைக்கப்படும் ராமானுஜரின் மந்திர உபதேசம் நம்பி கோவிலில் நடைபெற்றுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இந்த கோவில் அமைந்த இடத்தில்தான் முக்தி நிலையை அடைந்துள்ளார். அதாவது அவரது ஜீவசமாதி இங்கு அமைந்துள்ளது. 

நம்பிராயர் கோவிலுக்கு முன்பாக காவல் தெய்வமாக கால பைரவர் சன்னதி உள்ளது. பைரவருக்கு பூச்சட்டையும், வடை மாலையும் சாத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது. 

நம்பி மலைக்கு வரும் பயணிகள் இரண்டு வகையான பலனை அடைகின்றனர். மலை மேல் உள்ள நம்பியாண்டவரை தரிசித்தும், அருவியில் குளித்த ஆனந்தத்தையும் பெறுகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதிகள் இருந்தாலும் தேவையற்ற கெடுபிடிகள் இல்லாத சுற்றுலாத் தலமாகவே உள்ளது. மலையில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் மூலிகை கலந்து வருவதால் சோப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருக்குறுங்குடிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. அதுபோலவே அருகிலுள்ள வள்ளியூர், களக்காடு ஆகிய ஊர்களில் தங்கும் விடுதிகளும் உள்ளன.


Google Maps link - https://goo.gl/maps/j1aFx3TTwSTTubCQA



Leave a Comment