ஏழிசை இசைக்கும் கல் தூண்கள்


நெல்லை மாவட்ட கோயில்கள்1

பக்தி மணம் கமழும்  திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற சைவ, வைணவ திருத்தலங்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் உண்டு. இவற்றில் நெல்லை மாவட்டம் என்கிற பெயருக்குக் காரணமாக அமைந்த நெல்லையப்பர் கோயில் தனிச் சிறப்புப் பெற்றது.

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தெற்கு வடக்காக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ- வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது.

ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.


மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது மட்டுமின்றி மிக அகலமானதும் கூட. இந்த பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் இருக்கிறது.

இந்தக் கோயிலில் 2 கோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்கள் ஆகம விதிப்படி ராமபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. கோயிலின் மத்தியில் அழகான நந்தவனம் அமைக்கப்பட்டு, அதன் நடுவில் நூறு தூண்களுடன் கூடிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட பெரியது என பலரும் கூறுகின்றனர்.  

பிரசித்தி பெற்ற இந்தத் திருக்கோயில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  
நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

Google maps link //goo.gl/maps/LVxpCYS7PiGvPHc18 



Leave a Comment