நாம் இழந்ததை திருப்பித்தரும் சுந்தரவரதபெருமாள்


காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகியவை பல நூறு ஆண்டுகளாக தொடர் இயக்கத்தில் இருக்கும் நகரங்கள்.. பூமிக்கடியில் பழமைகளை பொக்கிஷங்களாக கொண்டிருக்கும் நகரங்கள்.


பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நடப்புகளின் சாட்சிகளாக நின்று கொண்டிருக்கும் தொன்மையான நகரங்களில் ஒன்று உத்திரமேரூர். உத்திரமேரூரில் உள்ள கோயில்களில் பொதுவாக காணப்படும் அம்சம் என்னவெனில் அங்குள்ள கோயில்களில் கோஷ்ட தேவதைகள் இருக்காது. 


மற்ற கோயில்களை பார்ப்பதற்கு முன் உத்தரமேரூரில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலை பார்க்கலாம். 
உத்தரமேரூரை அடைந்ததும் பேருந்து நிலையத்தில் இருந்து பார்த்தாலே தெரிவது சுந்தர வரதராஜ பெருமாள் கோயில்தான்.


பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது இந்த கோயில். பின்னர் ராஜராஜ சோழன் காலத்திலும், பாண்டியர்கள், சம்புவராயர்கள் என பின்னர் வந்த மன்னர்களின் காலகட்டங்களிலும் நன்கொடைகள் வழங்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் இந்த கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 


பெருமாள் நின்றும், இருந்தும், கிடந்துமாக மூன்று நிலைகளில் உள்ள கோயில்களில் சுந்தர வரதபெருமாள் கோயிலும் ஒன்று.  கோயிலின் கட்டுமானம் தனிச்சிறப்பானது. வெளியில் இருந்து பார்ப்போருக்கு 5 நிலை கோபுரம்தான் தெரியும். உள்ளே நுழைந்தால் வலப்பக்கம் பாழடைந்த மண்டபம் தென்படும். நேராக சென்று படிக்கட்டுகளில் ஏறி, கருடாழ்வார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தால் நின்றகோலத்தில் நான்கு கரங்களுடன் கூடிய பெருமானைக் காணலாம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிய திருக்கோலமது. 


வரதர் என்றாலே வரப்பிரசாதிதான். இந்த சுந்தர வரதரும் பேருக்கேற்றார்போல, வரம் தரும் வரதராகவே இருக்கிறார். இந்த சன்னதியின் இருபுறமுமாக வளையும் படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.


அடுத்த படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால், ஆதிசேஷன் மீது கிடந்த திருக்கோலத்தில் அனந்த பத்மநாபராக காட்சி தருகிறார். கோயிலின் சுற்றுப்பிரகாரங்களில் தெற்கு நோக்கி அச்சுத வரதர், மேற்கு நோக்கி அனிருத்த வரதர், வடக்கு நோக்கி கல்யாண வரதர் என பார்க்க பார்க்க திகட்டாத திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார் பெருமாள். 
மடி மீது தேவியை அமர வைத்துக்கொண்டு இருக்கும் வராக பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுண்ட பெருமாளையும் இங்கு தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம். 


இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. பாண்டவ சகோதரர்கள் தங்கள் அஞ்ஞாத வாசக்காலத்தில் வழிபட்ட தலமாக சுந்தர வரத பெருமாள் திருக்கோயில் கூறப்படுகிறது. 


இதன் பிறகே அவர்கள் இழந்த ஆட்சி, அதிகாரம், வலிமைகளை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு வந்தால் வாழ்க்கையில் எதையெல்லாம் இழந்ததாக கருதுகிறீர்களோ அத்தனையையும் திருப்பித்தர காத்திருக்கிறார் சுந்தர வரதராஜ பெருமாள். 


இழப்பென்று கருதுவதெல்லாம் இழப்பல்ல.. இந்த இறைவனை கண் கொண்டு பார்த்தபின் இழப்பெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.. தோல்வி, அவமதிப்பு, வஞ்சனைகளால் விரட்டப்பட்ட பாண்டவர்களுக்கு அருள்பாலித்து அவர்களை மீண்டெழச்செய்த பெருமாள் இங்கே சுந்தர வரதராஜராகவும், வைகுண்ட பெருமாளாகவும் எழுந்தருளியிருக்கும்போது நமக்கெல்லாம் என்ன குறை.. ? 


குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா.. குறை ஒன்றும் இல்லை கண்ணா..

- எழுத்தாளர் பாமா
 



Leave a Comment