திருச்செந்தூர் ஆறுமுகனை அறிவோம்.....
செந்தூரில் ஸ்ரீ செந்திலாண்டவனை தரிசிக்கச் செல்லும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு. இங்குள்ள அர்ச்சகர்கள் ‘திரிசுதந்திரர்கள்’ எனப்படுவர். இவர்கள் கேரள தேச ஆசாரப்படி பூஜிக்கிறார்கள்.
முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் சிங்க கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார்.
முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம்.
இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பர்.
முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபத்மன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.
மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்.
காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங்களாக விளங்குகின்றன என்பது ஐதீகம். முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையொட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய ஒன்று.
முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக ‘கந்த புராணம்’ கூறுகிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்பர். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது. ஒரு படியைக் கொண்டு எடுக்கும் அளவே நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு எனப் பெயர். இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும்.
Leave a Comment