திருப்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்.....
232 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருப்பட்டனம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 28 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
காரைக்கால் - நாகை வழித்தடத்தில் திருப்பட்டினம் என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது புகழ் பெற்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம். திருப்பதி சென்று வெங்கடாஜலபதி - யை வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் திருப்பதி சென்று வழிபட்ட புண்யம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
232 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்திற்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு கோயில் திருப்பணி வேலைகள் முடிவடைந்து, கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டன. கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகளும் முடிவடைந்தது.
இதை தொடர்ந்து கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. யாகசாலை அமைக்கப்பட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் விக்ரகம் யாகசாலையில் வைக்கப்பட்டு கால சாந்தி, பகவத் ப்ராத்தனை , புண்யாக வாசனம் , திருவாதாரனம் மற்றும் திருமஞ்சனம் உள்ளிட்ட விஷேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று 4ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மஹாபூர்ணாகதி நடைபெற்றது. இதன் பின்னர் மேள , தாள வாத்தியங்கள் முழங்க கடம்புறப் பாடு நடைபெற்றது. அதோடு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதன் பின்னர் இராஜகோபுரம் மற்றும் ஆலய விமானங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என சரண கோஷம் எழுப்பி பக்தியுடன் வழிபட்டனர்.
Leave a Comment