கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் திரிசூலநாதர்
சென்னை மீனம்பாக்கத்தில் சர்..சர்.. என விமானங்கள் வந்து இறங்குகின்றன, மேலேறி பறக்கின்றன, பரபரப்பாக இயங்கும் நெடுஞ்சாலையை கடப்பவர்கள் இங்கு இப்படி ஒரு ஆன்மீக தலம் இருப்பதை அறிவார்களா என்று தெரியவில்லை. இறைவனின் பெயராலேயே இந்த ஊர் இன்றளவும் அறியப்படுகிறது.
பிரம்மன் வழிபட்ட தலமாக இங்கு திரிசூலநாதர் எழுந்தருளியிருக்கிறார். நான்கு மலைகள் சூழ நடுவில் அமைந்துள்ளது திரிசூல நாதர் திருக்கோயில். தனது படைப்புத்தொழில் இடையூறின்றி நடக்க வேண்டி பிரம்மதேவர் ஒரு குளத்தை வெட்டி அங்கு சிவலிங்கம் அமைத்து வழிபடுகிறார். பிரம்மன் உருவாக்கிய பாணதீர்த்தம் கொண்ட இந்த சிவலிங்கமே திரிசூலநாதர் திருக்கோயில்.
நான்கு வேதங்களே நான்கு மலைகளாக, வேதங்களின் உட்பொருளான இறைவன் அவற்றின் நடுவில் வீற்றிருக்கும் இடமே திரிசூல நாதர் திருக்கோயில். பிரம்மதேவர் அமைத்ததாக கூறப்படும் தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜை, வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
விமான நிலையத்திற்கு எதிரில், ரயில்வே கேட்டை கடந்து வந்தால், ஒருகிலோமீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நந்தியெம்பெருமானை வழிபட்டு, நல்ல தரிசனத்திற்கு அனுமதிகேட்டு உள்ளே நுழைவோம். நுழைந்ததும் திரிசூலநாதரை தரிசிக்கலாம். திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதராக இருந்தாலும், அவருக்கு அருகே சௌந்தராம்பிகை இருக்கிறார். நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது, காரணம் திரிசூலநாதரின் அருகே இடப்புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இப்படி இருப்பதற்கு பின்னே ஒரு வரலாறு இருக்கிறது.
அந்நியர் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த சௌந்தராம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே அன்னையை இருக்கச்செய்திருக்கிறார்கள். அன்னையும், தந்தையுமாக உயிர்ப்புடன் அருள் தரும் தலம் இது.
அன்னையை தரிசிக்க வேண்டும் என்றால், ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால், அன்னையின் தரிசனத்தை பெறலாம். காலம் காலமாக அருள் சுரக்கும் அன்பு முகத்துடன் காட்சிதரும் அன்னை, உண்மையிலேயே சௌந்தரம் ததும்பும் பேரழகி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 -1120) காலத்தில் கட்டப்பட்டது. முதலில் வானவன் சதுர்வேதிமங்களம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் திருநீற்றுசோழநல்லூர் என்றும் பின்னர் இறைவனின் பெயரால் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பல்லவபரமன வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்களம், திருநீற்றுசோழநல்லூர், திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி, திரிசூலம் என்ற பெயர்களில் இந்த ஊர் வழங்கப்படுகிறது.
இக்கோயிலில் ஆதிசங்கரர், ஐயப்பன், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. கோயிலின் பழைமையை இங்கு நுழைந்ததுமே உணர முடியும். யக்ஷர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பிரம்மனுக்கே அருள்பாலித்த இடம் என்பதால் திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதரை வழிபட்டால் நமக்கு வரும் கெட்ட நேரங்களும் நல்லநேரங்களாக மாறும்..
நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க.. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
- எழுத்தாளர் பாமா
Leave a Comment