28 அடி உயர விஸ்வரூப பெருமாள்


ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் எது தெரியுமா?
காஞ்சிபுரத்தின் மிக பழமையான கோயில்களில் ஒன்று எது தெரியுமா?
அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்தால் அனைத்து பலன்களையும் தரும் கோயில் எது தெரியுமா?
திருப்பாடகம் – பாண்டவதூதர் பெருமாள் கோயில்


கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் என்று அழைத்தால் ஓடிவருவான்.
யசோத நந்தகோபாலனே! என்று பாடினால் புல்லாங்குழலோடு வருவான்.
நீராடும் பெண்களின் ஆடை திருடி விளையாடுவான்.
இப்படி குறும்புக்காரனாக, இனியவனாக, காதலனாக இருக்கும் கிருஷ்ணனை விஸ்வரூபத்தில் பார்த்திருக்கிறீர்களா?


இவன் வெண்ணெய் திருடி தின்றவனில்லை, நம் மனதை திருடி தின்றவன்.
இதுவரை எங்கும் பார்க்காத திருக்கோலத்தில் 28 அடி உயரத்தில் பாண்டவ தூத பெருமாளாக காட்சியளிக்கிறார் கிருஷ்ணர்.
கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில்தான் இப்படி எழுந்தருளியிருக்கிறார், இந்த பாண்டவதூத பெருமாள். 
காஞ்சியில் உள்ள விஷ்ணு கோயில்களில் மூன்று மிகவும் பழமையானவை. உலகளந்த பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள் மற்றொன்று நம் பாண்டவதூத  பெருமாள். 
முந்தைய காலத்தில் இந்த இடம் திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது. தற்போது அதுவும் காஞ்சியாகவே அறியப்படுகிறது. 


கோயில் எளிமையாக 3 நிலை கோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கருவறைக்குள் செல்லும் வரை இந்த கோயில் எளிமையாகவே தெரிகிறது. ஆனால், கருவறைக்குள் நுழைந்தால், இந்த பூமியையே நாம் மறந்துவிட வேண்டியதுதான். அப்படி ஒரு தரிசனம்.
கண்ணங்கரியனாய், காட்சிக்கழகனாய், அபயகரம் காட்டி அமர்ந்த திருக்கோலமது. 
அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு 28 அடி உயரத்தில் திவ்ய தரிசனம். அழகான வேலைப்பாடமைந்த ஆடை அணிந்து, அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பாண்டவ தூதரை கண்டதும் அத்தனை துயரங்களும் மறந்து அவன் காலடியில் சரணடைய மாட்டோமா என்ற ஏக்கத்தை விதைத்துவிடும் விந்தையை நம் மனதில் ஏற்படுத்திவிடுகிறார் இந்த பெருமாள்.


தோஷங்கள், துயரங்கள், வேதனைகளுடன் வருவோர், ஒருமுறை பாண்டவதூத பெருமாள் முன் நின்றுவிட்டால் அத்தனையும் சூரியனை கண்ட பனி போல விலகிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.
கோயிலின் வரலாறு
பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது கொடுக்கச் சொல்லி கேட்பதற்காக கவுரவர்களிடம் தூது போகிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் வருவதை அறிந்து அவரை கொல்ல சதி செய்கிறார்கள் கவுரவர்கள்.
மூங்கிலால் ஆன பொய்யாசனம் அமைத்து, அதன் கீழ் ஆயுதங்களுடன் மல்லர்களை நிறுத்தி வைக்கிறான் துரியோதனன். கிருஷ்ணருக்கு இது தெரிந்துவிடுகிறது. அடுத்து அவர் செய்ததுதான் இந்த கோயில் எழுந்த வரலாறு. 


கொல்ல சதி செய்து அமைக்கப்பட்ட பொய்யாசனத்தில் பாண்டவர்களுக்கு தூது போன பெருமாள் அமர்கிறார் சாதாரணமாக அல்ல. விஸ்வரூபம் எடுத்து அமர்கிறார். பொய்யாசனத்தின் கீழ் இருந்த மல்லர்கள் அழிக்கப்படுகிறார்கள். திருதுராஷ்ட்ரருக்கு பார்வை அளித்த அந்த நேரம் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். 
ஜெனமே ஜெயனும், ஹரித முனிவரும் இந்த விஸ்வரூபத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர். 
பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் தங்கள் பாடல்களில் இந்த ஊரை பாடகமாக குறிப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளனர். தாயார் ருக்மணியாக எழுந்தருளியிருக்கிறார். 

கோயில் புராணம்
இந்த கோயிலில் ரோஹிணி தேவி, கிருஷ்ணரை வழிபட்டு, ஞானயோக நிலை அடைந்து, சந்திர பகவானை அடைந்ததாக புராணம் கூறுகிறது. 27 நட்சத்திரங்களில் ஞானசக்தியை உடைய ரோகிணியை திருமணம் செய்து கொண்ட சந்திரன், பின்னர் அக்னி சக்தியாகிய கார்த்திகை தேவியையும், மற்ற நட்சத்திர தேவிகளையும் திருமணம் செய்து கொண்டாராம். ரோகிணி தேவிக்குள் அனைத்து நட்சத்திரங்களும் உள்ளடக்கி இருப்பதால் இங்கு அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட்டு பலன் பெறலாம். 


ரோகிணி தேவி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை பெற்றதுடன் இன்றும் மாய ரூபமாக இறைவனை வணங்கி வரம் பெற்ற தலமாக கருதப்படுகிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ரோகிணி சக்கரத்தை கிருஷ்ணர் பாதத்தில் வைத்து வணங்கினால், அனைத்து நற்பலன்களையும் பெறலாம், 
இங்கு ஸ்ரீகிருஷ்ணர், தனது பாதத்தை அழுத்தி அமர்ந்து விஸ்வபாதயோக சக்திகளை அருள்வதால், இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்தால் அவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளிலும் விஸ்வபூம்ய ஆகர்ஷண சக்தி பெருகி, சோகங்களுக்கும், துன்பங்களுக்கும் நிவர்த்தி தரும் என்பது ஐதீகம். 


பஞ்ச பாண்டவர்களை போல அடுக்கடுக்கான துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்தவர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு துணை நின்றதுபோல, மனித பிறப்பின் துயரங்களை கடக்க இந்த விஸ்வரூப கிருஷ்ணர் துணை நிற்பார். 
கோயிலுக்கு செல்லும் வழி
சென்னையில் இருந்து 80 முதல் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள தெருவில் பாண்டவதூதர் பெருமாளை தரிசிக்கலாம்.
-    எழுத்தாளர் பாமா



Leave a Comment