புத்திர பாக்கியம் அருளும்....பெருமாள்!


சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. கிரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ என வைணவ மரபில் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலம் தான் கிரிவரதராஜா பெருமாள் கோவில்

இத்திருத்தலத்தின் உற்சவர்கள் கரிவரதராஜ பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்ற திருப்பெயருடனும் சேவை சாதிக்கின்றனர். உற்சவரின் பெயரிலேயே ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல உற்சவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, கிணறு தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டவர். புராணப் பெருமை வாய்ந்த இந்த ஷேத்திரம், கல் திருப்பணி ரீதியாக 1400 ஆண்டுகள் தொன்மையானது. காஞ்சீபுரம் சென்று வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியாதவர்களுக்காக, இரண்டாம் நந்திவர்மப் பல்லவ அரசனால், இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போருக்குச் சென்றபோது இத்தலத்தில் தங்கியிருந்து, பெருமாளை வழிபாடு செய்த இவ்வரசன், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த ஆலயம் எழுப்பியுள்ளான் என இத்தலவரலாறு கூறுகிறது.

இங்கு பெருமாளை தரிசிப்பதற்கு முன்பு, சுதைச்சிற்ப ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களான சேனை முதலி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரை வணங்கி, ஆண்டாள், கனகவல்லித் தாயாரை வழிபட்ட பின்பே கரிவரதராஜப் பெருமாளை வழிபடுவது முறையாகும்.

மேலும் தொடர்ச்சியாக 12 வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் நீராஞ்சன தீபமேற்றி, மஞ்சள் மாலை சாற்றி வேண்டுவோருக்குத் திருமணம், குழந்தைப்பேறு வாய்க்கிறது. பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்குப் பேச்சுத்திறன் ஏற்படுத்தியும், காணாமல் போன குழந்தை திரும்ப கிடைக்கச்செய்தும் அதிசயம் நிகழ்த்தியுள்ளார். மனமுருகி வழிபடுவோருக்கு 21 நாளில் வேண்டுதல் நிறைவேறுவதாக இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.



Leave a Comment