தம்பதியர்களைக் காக்கும்...ஸ்ரீ உத்தர ரங்கநாதர்!


திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாளை நெடுந்தூரம் பயணம் செய்து தரிசிக்க முடியாதவர்களுக்காக திருமலையாவூர் குணசீலம், அரியக்குடி, ஒப்பிலியப்பன் கோயில் போன்ற இடங்களில் அந்த ஸ்ரீனிவாசனே எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.அவ்வண்ணம் - பூலோக வைந்தமாம் ஸ்ரீ ரங்கத்திற்குச் சென்று ஸ்ரீ ரங்கநாயகி சமேத ரங்கநாதப் பெருமாளைத் தரிசிக்க முடியாத தொண்டை வள நாட்டு பக்தர்களின் குறையைத் தீர்க்கிறார். வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ உத்தர ரங்கநாதர்.

வேலூர் - பெங்களூர் நெடுஞ்சாலையில் 23 கிமீ பயணித்து, குடியாத்தம் செல்லும் வழியில் 1 கி.மீ தூரம் சென்றால் ஸ்ரீ உத்தர ரங்கநாதரின் கம்பீரமான ராஜகோபுரம் நம்மை அன்போடு அழைக்கிறது.ஸ்ரீ உத்தர ரங்கநாதப் பெருமாளின் இப்போதைய திருக்கோயில் கட்டமைப்பு சுமார் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் குலோத்துங்கனின் மகனாகிய விக்கிரம சோழன் இப்பிராந்தியத்தையும் சேர்த்து ஆண்டபோது திருக்கோயில் கைங்கரியங்களுக்காக ஏராளமான நிலப்பரப்பு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது. சோழ அரசுக்கு உட்பட்ட சம்புவராயர்கள் என்னும் சிற்றரசர்களும் விக்கிரம சோழன் கருத்திற்கிணங்க  இத்திருக்கோயிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளார்கள்.கிருஷ்ணதேவராயர் காலத்தில் திருமதில் உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றுள்ளது இத்திருக்கோயில்.

ஸ்ரீ ஆண்டாளைப் போன்ற சிறந்த பக்தையான செண்பகவல்லி என்ற பெண்ணை இத்தலத்து  எம்பெருமான் பங்குனி உத்திரத்தன்று  மணந்து கொண்டதால் இத்திருக்கோயிலில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் நீண்ட காலம் சிறப்பான இல்லறம் நடத்துவார்கள் என்பது ஐதீகம்.இத்தலத்து தாயாரின் பெயரும் ஸ்ரீ ரங்கநாயகிதான். பள்ளி கொண்டா ஸ்ரீ உத்தர ரங்கநாதரைத் தரிசிக்க பக்தர்கள் குறைகள் நீங்கி எல்லா நன்மைகளும் பெற்று வாழ்வார்கள்.



Leave a Comment