திருமால் வணங்கிய...அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள்!
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனைக்கும் தொண்டிக்கும் இடையில் அமைந்துள்ள சிற்றூர் திருவொற்றியூர்.ஊரின் நடுவினில் பாகம் பிரியாள் கோயில் சுமார் ஜந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அந்த ஊருக்கும் அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக்க காப்பவள் பாகம் பிரியாள். அக்கோயிலில் தெற்கு முகமாய் அமர்ந்திருக்கும் அவளுக்கு நான்கு கரங்கள் அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம், நீலோத்பல மலர், ஜபமாலை தாங்கி இருக்கின்றன.
திருமால் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி அளந்து மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொண்டான், சிவபக்தனமான மகாபலியின் சிரசில் பாதம் வைத்ததனால், திருமாலின் காலில் புற்று உருவானது. அதற்கு விமோசனம் தேடி இந்த ஊருக்கு வந்து வாசுகி தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு அன்னை பாகம் பிரியாளை வணங்கி பாபவிமோசனம் பெற்று திருமால் குணமடைந்தார் என்பது இத்திருத்தல வரலாறு. இத்திருக்கோவிலில் அன்னை சந்நிதி அருகில் இறைவன் வான்மீகி நாதர்லிங்க ரூபமாக கிழக்கு நோக்கி உள்ளார். சுவாமி சந்நிதி அருகில் வாசுகி தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. அம்மன் சந்நிதி முகப்பில் இருபுறமும் வியாதியுடையவர்கள் தங்குவதற்கு கூடங்கள் அமைந்திருக்கின்றன.
கோயிலின் பிரதான பிரகாரத்தில் ஒரு பெரிய வில்வமரம் உள்ளது. அதன் அடிப்பாகத்தில் உள்ள துவாரத்தில் வாசுகி என்ற நாகம் குடியிருக்கிறது. செவ்வாய். வெள்ளி போன்ற அம்மனுக்கு உகந்த கிழமைகளில் கோழி முட்டைகள் நூற்றுக்கணக்கில் அந்த துவாரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. திருமாலே குணமடைந்த இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் மனிதனின் வியாதிகள் சர்வ நிச்சயமாய் குணமாகும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. அவள் கருணை மழையில் வியாதிகள் கரைந்து போவதால் இத்திருத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்த வண்ணமுள்ளனர்.
Leave a Comment