சிவலிங்கத்தின் சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய கோயில் !!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது ரத சப்தமி அன்று சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம் உள்ள திருத்தலத்தின் புராணப் பெயர் திருவோத்தூர் என்பதாகும். இத் தலத்தில் தேவர்களுக்கு ஈசன் வேதங்களை உபதேசம் செய்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது. திருவோத்தூர் என்பது தற்போது திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.
பார்வதியின் தந்தையான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். ஆனால் அந்த யாகத்திற்கு உலகை காத்தருளும் சிவபெருமானை அழைக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் பார்வதிதேவி வருத்தம் கொண்டாள். தன் கணவனை அழைக்காததற்கு காரணம் என்ன என்பது பற்றி அறிய அவர் தட்சனிடம் சென்றான். ஆனால் பார்வதி தேவி அங்கு செல்வதற்கு சிவபெருமான் சம்மதிக்கவில்லை.
இருந்தாலும் அவரது சொல்லை மீறி பார்வதிதேவி யாகத்திற்குச் சென்றாள். அங்கு அன்னைக்கு அவமரியாதை ஏற்பட்டது. கணவனின் சொல்லை மீறிச் சென்று அவமானத்தை சந்தித்ததற்காக பாவம் நீங்க, பார்வதிதேவி இத்தலத்தில் வந்து தங்கி இறைவனை நினைத்து தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.
தேவர்களுக்கு வேதத்தை இறைவன் ஓதிவித்தான். சிவபெருமான் தேவர்களுக்கு இத்தலத்தில் வைத்து வேதத்திற்கு பொருள் சொன்னார் என்பதால் இந்தத் தலம் திருவோத்தூர் என்று அழைக்கப்பட்டது என்கிறது தல வரலாறு.
இந்த இறைவன் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்க வடிவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் மீது தினமும் சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இருப்பினும், ரத சப்தமி அன்று இறைவன் மீது சூரியக் கதிர் படுவது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
இறைவியின் திருநாமம் இளமுலையம்பிகை என்பதாகும். அன்னைக்கு பாலகுஜாம்பிகை என்ற பெயரும் உள்ளது. ஆலயத்தில் மகா மண்டபத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், நவக்கிரகங்கள், தலமரம் என்று எல்லாவற்றையும் தரிசிக்க முடியும். ஒரே இடத்தில் நின்றபடி இவை அனைத்தையும் தரிசினம் செய்வது இந்த ஆலயத்தில் முக்கிய சிறப்பாக உள்ளது.
சிவபெருமானைப் போற்றி பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240–வது தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிப் புகழ்ந்துள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானை அருண கிரிநாதர் பாடியுள்ளார்.
இத்தல இறைவனான வேதபுரீஸ்வரரை, விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, இத்தலத்தில் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் காரணமாக இந்த ஊர் ‘செய்யாறு’ என்று பெயர் பெற்றுள்ளது. இத்தல விநாயகர் ‘நர்த்தன விநாயகர்’ என்றும், முருகப்பெருமான் ‘சண்முகர்’ என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் 9 வாசல்களைக் கடந்து சென்றால்தான் மூலவரை தரிசிக்க முடியும். பஞ்ச பூதத் தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னிதிகள் இங்கு இருக்கின்றன. எனவே இங்கு பஞ்சபூத லிங்கங்களையும் தரிசிக்கலாம். ஒரே இடத்தில் நின்றபடி ஆலயத்தின் 8 கோபுரங்களை தரிசிக்க முடியும்.
இந்த ஆலயத்தில் தை மாதம் 10 நாள் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. தை அமாவாசைக்கு அடுத்த நாள் கொடியேற்றம் செய்யப்படும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும். இது தவிர ஆடி மாதத்தில் லட்ச தீபம், பங்குனி உத்திரம், மாசி மகம், சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், தலமரமான பனை மரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
பொதுவாக அனைத்து சிவாலயங் களிலும் நந்தியானது, இறைவனை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆலயத்தில் உள்ள நந்தி வாசலை நோக்கியபடி அமைந்திருக்கிறது. இதற்கு ஒரு கதையும் கூறப்படுகிறது. அதாவது இத்தல ஈசன், தேவர்களுக்கு வேதம் ஓதிக் கொண்டிருந்தார். அப்போது பாடம் சொல்லிக் கொடுக்கும்போது இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நந்தியை இறைவன் பணித்தார். அதன்காரணமாகவே நந்தி, ஆலய வாசலை நோக்கியபடி இருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர இந்தப் பகுதியை ஆண்ட தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரிய தயக்கம் காட்டி, இத்தல இறைவனை வேண்டினான். இதையடுத்து ஈசன் நந்தியை வாசலை நோக்கி காவல் காக்கும்படி சொன்னதால், நந்தி வாசலை நோக்கியபடி இருப்பதாகவும் இருவேறு காரணங்கள் கூறப்படுகிறது.
வேதபுரீஸ்வரர் ஆலயம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட, அதனால் கோவில் சுவர்கள் பாழாகி வந்தன. இதனால் வருத்தம் கொண்ட சிவனடியார் ஒருவர், ஆற்றின் கரையை உயர்த்தி மண் கரைந்து போகாமல் தடுக்க பனங்கொட்டைகளை நட்டு பனை மரங்களை வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த பனை மரங்கள் அனைத்துமே ஆண் பனையாக இருந்தன. இதைப் பார்த்து சிலர், காய்க்காத ஆண் பனையை வைத்துக் கொண்டு என்ன செய்ய? என்று ஏளனம் செய்தனர்.
ஒரு முறை இந்தப் பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம், தன்னுடைய வருத்தத்தை சிவனடியார் கூறினார். இதையடுத்து சம்பந்தர் இத்தல இறைவனின் மீதும், ஆண் பனை பெண் பனையாக மாற வேண்டியும் 11 பாசுரங்களை பாடினார். இதில் ஆண் பனை மரங்கள் அனைத்தும் பெண் பனைமரங்களாக மாறி காய்த்துக் குலுங்கின.
இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது பிற மதத்தைச் சேர்ந்த சிலர், வேள்வி ஒன்றை நடத்தி சம்பந்தர் மீது கொடிய பாம்புகளை ஏவிவிட்டனர். சம்பந்தர் இத்தல ஈசனை நினைத்து வேண்டினார். உடனே சிவபெருமான், பாம்பாட்டியாக வந்து அந்த பாம்புகளை பிடித்துக் கொண்டு மறைந்துவிட்டார். 11 சர்ப்ப தலைகளுடன் இந்த நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகநாத லிங்கத்தை சனிக் கிழமை தோறும் ராகுகாலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
Leave a Comment