திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதனையடுத்து ஆறு கால் மண்டபத்தில் தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. மேலும் நாதசுவரம் ஒலிக்க மேள, தாளங்கள் முழங்க நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்கி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி கும்பிட்டனர்.
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்வார். இதேபோல் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணத்திற்கு ஆண்டிற்கு ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றத்திற்கு வருவார்கள்.
இதன்படி இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்கும் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணத்திற்காக மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளுகின்றனர்.
Leave a Comment