நெல்லையப்பர் கோவிலில் ஏப்ரல் 27ல் கும்பாபிஷேகம்


பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கான பந்தக்கால் நடும் விழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும். பாண்டியர் கால சிவாலயங்களில் பழமையானது. கருவூரார் சித்தர், அகஸ்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. இதைத்தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி கோவில் கோபுரம், விமானம், கொடிமரம், சுற்றுச்சன்னதிகள் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் தளம் அமைத்தல், கோபுரம், விமானங்கள் புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல், வெள்ளையடித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைகள் அமைப்பதற்கான கொட்டகை அமைக்கும் பணிக்கான கால்நடும் விழா மற்றும் பந்தக்கால் நடும் விழா ஆகியவை நாளை மறுநாள் காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடக்கிறது.



Leave a Comment