ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் 30 லட்சம் பேர் பங்கேற்ற பொங்கல் விழா
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் உலக பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு மாசி மாத பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தப் பொங்கல் வழிபாட்டில் தமிழகம் மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவலன் மரணத்தை தொடர்ந்து நீதி கேட்டு மதுரையை எரித்து கோவத்துடன் கொடுங்கலூர் சென்று வானுலகம் அடையுமுன் கண்ணகி வந்த இடம் தான் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் என்னும் பகுதி. இங்கு கேரளா மக்கள் பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். இங்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படும். பல லட்சம் பெண்கள் குவிந்து வழிபாடு செய்யும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் வழிபாட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு பதினைந்து லட்சம் பெண்கள் மற்றும் 2009-ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு வெளிப்பட்டது உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. காலை 10.15 மணிக்கு கோயில் தந்திரி குழிக்காடு வாசுதேவன் பாட்டதிரிப்பாடு ஆலய ஸ்ரீகோயிலில் இருந்து தீபம் எடுத்து வந்து, முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து, பொங்கல் வழிபாட்டை துவங்கி வைத்தார். அதன் பின் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது . திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணபட்டது. மதியம் 2.15 நிவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடைந்தது.
Leave a Comment