ராகு - கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம்


பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச் சிறந்த ராகு - கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். ஆதிசேஷன், ராகு, கேது மற்றும் அஷ்டமா நாகங்கள், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நிவர்த்தியாகப் பெற்ற தலம். ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும், உற்சவ விக்கிரகமும் கோயிலில் உள்ள தலம். திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன், திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக, அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவராத்திரி அன்று இரவில், ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம்; இந்திரன் சாபம் நீங்கிய தலம்; கங்கை பாவம் தொலைந்த தலம்; சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது. ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்துக்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி, கோவில் அர்ச்சகர் வழி பரிகாரங்கள் செய்து, தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். ராகு - கேது தோஷங்கள் நீங்க, கல்லால் ஆன நாக வடிவங்களை இக் கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.



Leave a Comment