பஞ்சபூதத்தில் முதல் தளமான காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவில்
ஏகாம்பரேசுவரர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் நிலம் எனப்படும் மண்ணினை இத்தலம் குறிக்கிறது. இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. கம்பை ஆற்றின் கரையில் சுயம்புவாக எழுந்தருளிய இறைவனை உமையம்மை கண்டபோது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள மிகுதியால் இறைவனை இறுக அணைத்தாள். அதனால் இறைவனின் திருமேனி குழைந்து அதில் தழும்புகள் ஏற்பட்டன. அதனால் இத்தல இறைவன் தழுவக் குழைந்த நாதர் என்றழைக்கப்படுகிறார். இத்தலம் முக்திதரும் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் பார்வையிழந்து தவித்தபோது இத்தல இறைவனின்மீது பாடல்கள் பாடியே இடக்கண் பார்வையைப் பெற்றார். சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவனுக்கு அபிசேகங்கள் நடைபெறுவதில்லை. இவ்விடம் திருக்குறிப்புத்தொண்டர், கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் போன்ற நாயன்மார்களின் அவதாரத் தலம் மற்றும் சாக்கிய நாயனாரின் முக்தித்தலமாகும். இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற நாமத்துடனும், அம்மை ஏலவார்குழலி என்ற நாமத்திலும் அருள்புரிகிறார்கள்.
Leave a Comment