திருமுல்லைவாயிலில் பச்சைமலையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் மன்னாதீஸ்வரர், பச்சைமலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான, தொன்மை வாய்ந்த திருமுல்லைவாயில் பச்சைமலையம்மன் சமேத மன்னாதீஸ்வரர் திருக்கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்தன.
இதையடுத்து இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கடந்த 22-ஆம் தேதி திங்கள்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, 25-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. சனிக்கிழமை காலை 8 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், மாலை 4.30 மணிக்கு 5-ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. மகா பூர்ணாஹுதியும் அதைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு, யாத்ரா தானமாக வந்து ராஜ கோபுரத்துக்கு 9.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி பச்சைமலையம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Leave a Comment