குறையில்லா வாழ்வு தரும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வர்!


திருப்பாச்சிலாச்சிராமம் என்று ஞானநூல்கள் போற்றும் தேவாரத் திருத்தலம் திருவாசி. திருச்சியிலிருந்து முசிறி, நாமக்கல், சேலம் செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது.  

'வாசி' என்றால் குற்றம். குற்றமில்லாத பெருவாழ்வு பெற, திருவாசியில் எழுந்தருளி இருக்கும் பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வர் ஒருவரே துணை என்று திருமுறைகள் புகழ்கின்றன. தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் 62 ஆவது காவிரி வடகரைத் தலம் இது. திருஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல்பெற்ற புண்ணிய க்ஷேத்திரம். சிவனடியார்கள் மகிழ்ந்து பாடிப் பரவும் 'துணி வளர் திங்கள் துலங்கி விளங்க' என்ற பதிகம் பிறந்தது இந்தத் தலத்தில்தான்.

திருவாசி ஆலயம் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. ஹொய்சாள சோழ நாயக்கர்களால் பெரும் கற்றளியாக கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டடக் கலை சிறப்புகள் கொண்டது. நான்கு தூண்களுக்கு நடுவில், வெளியே எடுக்க முடியாதபடி திகழும் உருளைக் கல் சிற்ப வேலைப்பாடு, அதற்குச் சான்று.

சோம வாரமாகிய திங்கட்கிழமையில் மாற்றுரைவரதீஸ்வரருக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட்டால் நிரந்தர வேலை, வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி, பூர்வீகச் சொத்து பிரச்னை நீங்குதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவாசி ஆலயத்தில், கிரக மூர்த்தியர் சூரியனை நோக்கியே அமைந்துள்ளனர். சூரியதேஷம் உள்ளவர்கள் இத்தல நவகிரகங்களை வழிபடுவது சிறப்பு.

சண்டிகேஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்துள்ள திருத்தலம் இது. தம்பதி ஒற்றுமை வேண்டவும், படித்துக்கொண்டிருக்கும் பெண்கள் மனம் தடுமாறாமல் படிப்பில் கவனம் செலுத்தவும் வேண்டி, இந்த அம்மனை வழிபடுகிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இந்தச் சண்டிகேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. கஜலட்சுமித் தாயாருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு; செல்வகடாட்சம் அருளும் அன்னை இவர்.

இத்தலத்தில் உள்ள தலவிருட்சமான வன்னிமரம் ஆயிரம் வருடங்கள் பழைமையானது. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் முன்மண்டபத்தில் அதிகார நந்தி தன் மனைவியுடன் அருள் பாலிப்பது சிறப்பு. 

இத்தலத்தில் அருளும் சண்முகப் பெருமான் சிறந்த வரப்பிரசாதி. இவரின் மயில் வாகனம் வழக்கத்துக்கு மாறாக இடம் மாறித் திகழ்கிறது. இவரை வழிபடுவதால் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்

கோயிலின் கமல மண்டபம் அருகில், ஞானசம்பந்தப் பெருமான் மன்னன் மகளின்நோய் தீர்த்த அற்புதம், சுந்தரர்க்கு இறைவன் பொற்கிளி கொடுத்த அற்புதத்தை விவரிக்கும் சிற்பக் காட்சிகளும், அர்த்தமண்டபத்தின் அருகில் கிளி கொடுத்தருளிய திருவாசலும் அவசியம் தரிசிக்கவேண்டியவை.

அம்பாள் சந்நிதியின் கோஷ்டத்தில் இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, கெளரி சக்தி, உமா சக்தி ஆகிய 5 அம்பிகைகள் அருள்வது, இக்கோயிலின் சிறப்பம்சம்.

இங்கே அருள்புரியும் பாலாம்பிகை மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள். பாலாம்பிகை சந்நிதிக்கு நேர் எதிரே செல்வ விநாயகர் அருள்கிறார். இவர் கன்னிமூல கணபதி என அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால் திருமண தோஷம், குழந்தையின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அம்பாள் சந்நிதியின் முகப்பில் இரண்டு துவாரபாலகிகளைக் காண முடிகிறது. இவர்கள் குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்காக அம்பாளிடம் பரிந்துரைப்பதாக ஐதீகம்.திருமணமாகாத பெண்கள் இந்த துவார பாலகியருக்கு மஞ்சள் கயிறு கட்டியும் பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்கள் இவர்களின் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக, இவர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள அன்னமாம் பொய்கை என்ற தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு... இவற்றுள் ஏதேனும் ஒரு கிழமையில் காலை 7 மணிக்கு அன்னமாம் பொய்கையின் நீரைத் தலையில் தெளித்துக்கொண்டு, அம்பாளுக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். இது போல ஐந்து வாரங்கள் தொடர்ந்து செய்து வழிபட்டால், நல்ல வரன் அமைந்து திருமணம் வெகு சீக்கிரம் நடைபெறும். அம்பாளை 9 முறை வலம் வந்து வழிபட்டால், குழந்தைப் பேறு வாய்க்கும்.



Leave a Comment