விருப்பங்களை நிறைவேற்றும் தை மாத தரிசனம்!
தை மாதத்தை மகர மாதம் என்பார்கள். சூரியதேவனின் வடதிசை பயணம் தொடங்கும் உத்தராயனப் புண்ணியக் காலத்தின் ஆரம்பம் தை மாதம். ஆத்மகாரகனான சூரியனை வழிபட உகந்த மாதமும்கூட. ஆகவே, அந்த மாதத்தின் முதல் நாள் ஆதவனைப் போற்றும் பொங்கல் திருநாளாகத் திகழ்கிறது.
காலச் சக்கரத்தில் மகர ராசிக்குள் சூரியக்கடவுள் பிரவேசிக்கும் இந்தப் புண்ணிய மாதத்தில், சூரியனை வழிபடுவதாலும், சூரியன் வழிபட்ட - வழிபட்டு வரும் திருக்கோயில்களை தரிசிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்; நம்முடைய நல்ல விருப்பங்கள் யாவும் நிறைவேறும் என்கின்றன ஞானநூல்கள்.
சூரிய திருத்தலங்களோடு, தை மாத தரிசனத்துக்குரிய பிரத்யேகமான வேறு சில கோயில்களும் உண்டு. அத்தகைய சில அற்புத க்ஷேத்திரங்கள் இங்கே...
சூரியக் கோட்டம்
சூரியனுக்குத் தனியாக ஆலயம் அமைக்கும் வழக்கம் தற்போது இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் சூரியன், சந்திரனுக்குத் தனித் தனியே கோயில்கள் இருந்ததுபற்றிய குறிப்புகள் உண்டு. பூம்புகாரில் இருந்த சூரியனின் ஆலயத்தை `உச்சிக்கிழான் கோட்டம்’ என அழகுத் தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றத் தலங் கள் தமிழகத்தில் இருவகையான உள்ளன. முதலாவது வகை - சூரியன், தேவ வடிவில் எழுந்தருளி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்கள். அவை: மங்கலக்குடி, பருதிநியமம், திருநாகேஸ்வரம்.
இரண்டாவது வகை - ஆண்டில் குறுப்பிட்ட சில நாள்களில், சூரிய பகவான் தன் ஒளிக்கிரணங்களால் இறைத் திருமேனியைத் தழுவி வழிபடும் ஆலயங்கள் ஆகும். இவ்வகை ஆலயங்கள் பலவுண்டு.
திருமங்கலக்குடி
சூரியன் வழிபட்ட ஆலயங்களில் குறிப்பிடத்தக்கது மங்கலக்குடி அருள்மிகு பிராணவரதேஸ்வரர் ஆலயம். மங்கலனாகிய சூரியபகவான் வழிபட்டதால் இந்த ஊர் மங்கலக்குடி என்றானது.
இங்கு சூரியனும் மற்றுமுள்ள எட்டு கிரகங்களும் வழிபட்டு அருள் பெற்றதாக அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது. காலவ ரிஷியின் கிரக தோஷங்களை நவகிரகங்கள் தாமே முன்னின்று தீர்த்ததால், அவர்கள் காலதேவனின் சாபத்தைப் பெற்றனராம். அதனால், பிணிக்கு ஆளான நவகிரகங்கள் மங்கலக்குடிக்கு வந்து ஈசனை வழிபட்டு நிவர்த்தி பெற்றன.
சூரியனால் வழிபடப்பெற்ற மங்கலக்குடி ஈசன், பிராண வரதேஸ்வரர் என்றும் அம்பிகை மங்கல நாயகி என்றும் வணங்கப்படுகின்றனர். மங்கலக்குடி அருகேதான் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. மங்கலக்குடிக்கு வந்து தரிசித்து வழிபட்ட பிறகே, சூரியனார் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும் என்பது நியதியாகும்.
ஆதித்ய அபயப் பிரதாம்பிகை
ஒருமுறை, தமது கடமையில் இருந்து தவறிய சூரியபகவான் மீது ஈசன் கோபம் கொண்டார். ஈசனின் கோபத்திலிருந்து தப்பிக்க சூரியன் அம்பிகையைச் சரண் அடைந்தார். சூரியனைப் பாதுகாத்து அபயம் அளித்த அம்பிகை, திருநீடூர் எனும் திருத்தலத்தில் ஆதித்ய அபயப் பிரதாம்பிகை என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள்.
மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது திருநீடூர். தேவாரப்பதிகம் பெற்ற இந்த ஆலயத்தில் ஈசன் சோமநாதேஸ்வரராக அருள்கிறார். இங்கு வந்து வழிபட்டால் சூரியனின் நல்லாசி பெறலாம்; அவரின் திருவருளால் சகல தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள்.
திருக்கழுக்குன்றம்
ஒருமுறை பன்னிரு ஆதித்யர்களுக்கும் இடையே, தங்களில் யார் உலகில் பணி செய்வது என்று போட்டிப்போட்டுக் கொண்டனராம். பிரம்ம தேவன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்துக்கு ஒருவராகப் பணிசெய்யும்படி பணித்தாராம். அப்படி, அவர்கள் பணிசெய்யும் காலத்தில் மந்தேகர் முதலான அசுரர்களால் தடங்கல்கள் ஏற்பட்டன.
அவர்கள் மீண்டும் பிரம்மனைச் சரணடைந்தனர். அவரது அறிவுரைப்படி, பூலோகத்தில் உருத்திரக்கோடியாகிய திருக்கழுக்குன்றம் தலத்தை அடைந்து சிவனாரை வழிபட்டு, தடைகள் நீங்கப் பெற்றனர். இதன் காரணமாக பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்யபுரி ஆகிய சிறப்புப் பெயர்களோடு திகழ்கிறது திருக்கழுக்குன்றம். சூரியனுக்கு உகந்த தைமாதத்தில், பன்னிரு ஆதித்யரும் வழிபட திருக்கழுக்குன்றம் ஈசனை நாமும் வழிபட்டு வரம்பெற்று வருவோம்.
Leave a Comment