சங்கடங்கள் தீர்க்கும் சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள அருமையான திருத்தலம், ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் திருக்கோயில். நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்த மலைக் கோயில் இது!
இங்கு, அம்பாளின் திருநாமம்- ஸ்ரீமரகதாம்பாள்; ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீசந்திரசூடேஸ்வரர். ஹொய்சாள மன்னன் இந்தக் கோயிலை நிர்மாணித்தான் என்கிறது ஸ்தல வரலாறு.
சுமார் 200 படிகளைக் கடந்தால், அற்புதமான ஆலயத்தை அடையலாம். தெற்குப் பார்த்த அழகிய ஐந்தடுக்கு கோபுரம்; ஆலயத்தில், பாறையைக் குடைந்து, தூண்களை அமைத்துள்ள விதம், அந்நாளைய கட்டடக் கலையின் சிறப்புக்குச் சான்றாகத் திகழ்கிறது.
லிங்க வடிவில், ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் காட்சி தர, தனிச் சந்நிதியில், கனிவு பொங்கக் காட்சி தருகிறாள் ஸ்ரீமரகதாம்பிகை.
கோயிலில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. சந்நிதிக்குள் தண்ணீரை நிரப்பி, 16 நாட்கள் பூஜை செய்து வழிபடுவார்களாம். அப்படிச் செய்தால், அந்த வருடம் மழை வெளுத்து வாங்குமாம்!
மாசி ரதோத்ஸவம், திருவாதிரை, மகா சிவராத்திரி என வருடந்தோறும் பல விழாக்கள் விமரிசையாக நடந்தாலும், திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிறப்புற நடைபெறுகிறது. மலைக்கோயிலில், மகாதீபம் ஏற்றப்பட்டு, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், உத்ஸவங்களும் நடைபெறும்.
ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை தரிசித்தால், சகல சங்கடங்களும் தீரும்; குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்; பிரிந்த தம்பதி ஒன்றாகச் சேருவார்கள் என்பது ஐதீகம்! எனவே, இந்த தீபத் திருநாளில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற ஊர்களில் இருந்து, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.
மலையில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை, தரிசிப்போம்; மங்காத செல்வங்களைப் பெறுவோம்!
Leave a Comment