சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசம்...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 29-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலாவும், 30-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலா வருகிறார்.
ஜனவரி 1-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 2-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 3-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
Leave a Comment