திருமகளாய் அருளும் திருமால்!
கல்யாண வரம் அருளும் பெருமாளின் திருத்தலங்களில் ஒன்று ஔஷதகரி. சென்னை செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ளது சிங்க பெருமாள் கோவில்.இங்கிருந்து ஒரகடம் செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் ,ஆப்பூர் எனும் கிராமத்தின் வலப்புறம் அமைந்திருக்கிறது. ஔஷதகரி எனும் குன்று.இதன் மீது கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குப் புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.
பொதுவாக பெருமாளின் திருமார்பில் திருமகளும் தாயாரும் இருப்பதை நாம் பல தலங்களில் தரிசித்திருப்போம்.ஆனால் ஔஷதகரி கோயிலில் அருளும் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்னவேங்கடேச பெருமாளே திருமகளாக தரிசனம் தருவதகா ஐதிகம். அதன் காரணமாகவே இங்கே பெருமாளுக்கு ஆறு கஜ புடவை வஸ்திரமாகப் பக்தர்களால் சாத்தப்படுகிறது. கல்யாண வரம் வேண்டி வருபவர்கள் பெருமாளுக்குப் புடவை சாத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.
உயர்ந்த மலையின் மீது இயற்கை எழில் நிறைந்த சூழ்நிலையில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளைத் தரிசிக்க 508 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.கோயில் சிறியது தான் .ஆலய முன்மண்டபத்தில் கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார். மண்டபத்தின் விதானத்தில் தசாவதாரக் காட்சிகளும் அஷ்டலட்சுமியர் வடிவங்களும் கதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருகின்றன. கருவறையில் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்னா வெங்கடேச பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியும்.அபய ஹஸ்தம் காட்டியபடியும் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். சித்தர்களும்,அகத்திய மகரிஷியும் வழிப்பட பெருமாளே இங்கு எல்லாமுமாக இருப்பதாக ஐதிகம். ஆகவே ,பெருமாளையும் கருடழ்வாரைத் தவிர வேறு தெய்வங்களோ சந்நிதிகளோ இல்லை. அனுமன் இலங்கைக்குச் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் விழுந்த சிறு குன்றே ஒளஷதகிரியாக இங்கு காட்சி தருகிறது. அற்புத மூலிகைகள் நிறைந்த மலை என்று இதை குறிப்பிடுவார்கள். இங்கு எப்போதும் வற்றாமல் திகழும் கிணற்று திர்த்தமே பெருமாளின் திருமஞ்சனத்துக்குப் பயன்படுகிறது. பெருமாளே திருமகளின் அம்சமாகவும் அருளும் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் வறுமை,கடன் தொல்லைகள் நீங்கும், செல்வகடாட்சம் ஸித்திக்கும். மேலும்,மூலிகைகள் நிறைந்த தலமாதலால் இங்கு வரும் பக்தர்களுக்கு உடற்பிணிகள் நீங்குவதோடு ,பெருமாளின் திருவருளால் மனப்பிணிகளும் நீங்கி மகத்தான வாழ்க்கை அமையும்.
Leave a Comment