அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல்பெற்ற திருப்பாசூர் சிவன் கோயில்...


அசுரர்களான மது கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட தோஷங்களை நீக்க மூங்கில்கள் அடங்கிய வனத்தில் சிவபெருமானைப் பூஜிக்கிறார். அவருக்கு அருள் பாலிக்க மூங்கில்களுக்கிடையே சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளுகிறார். பாசூர் என்றால் மூங்கில்.
 
மூங்கில்களுக்கு இடையே தோன்றியதால் பாசூர் நாதர் என்று போற்றப்படுகிறார். இந்தத் தலமும் திருப்பாசூர் என்று வழங்கப்படுகிறது. இறைவனுக்கு வாசீஸ்வரர் என்கிற பெயரும் உண்டு. இவ்வழியே செல்லும்போது, மூங்கில்களுக்கிடையே இருக்கும் சிவலிங்கத்தைக் கண்ட கரிகாலச் சோழன் இக்கோவிலை எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது.
 
சோழன் கரிகால் பெருவளத்தானின் சிற்றரசராக இருந்த குறும்பன் என்பவர் கப்பம் கட்ட மறுக்க, இறைவன் நந்தீஸ்வரரை அனுப்பி குறும்பனுக்கு உதவியாக இருந்த காளிக்குப் பொன் விலங்கிட்டு அழைத்து வந்து கப்பம் கட்டச் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தலம் என்று தலபுராணம் கூருகிறது. சோழர் கால கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக்கிடைக்கின்றன. சுவாமி சன்னிதியின் வலப்புறம் அம்மன் சன்னிதி இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இவ்வாறு இருப்பது ஆக்கும் சக்தியை அளிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.
 
இறைவி தங்காதளி அம்மன். இரு சன்னிதிகளும் தனித்தனி விமானங்களுடன் அமைந்துள்ளன. சொர்ணகாளிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அம்பாளே இங்கு இறைவனைப் பூஜை செய்துள்ளதால், முதல் பூஜை அம்பாளுக்கு நடைபெறுகிறது. கருவறை வாயிலில் இடப்புறம் 11 விநாயகர் மூர்த்தங்களுடன் ஏகாதச விநாயகர் சபை நம்கண்களைக் கவர்ந்திழுக்கிறது.
 
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் திருத்தலமாகும் இது. திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில், சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், கடம்பத்தூருக்குப் பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.



Leave a Comment