அருணாசலேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது....
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சிறப்புப் பூஜைகளுடன் உண்ணாமுலையம்மன் சன்னிதியில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 4-ம் தேதி வரை தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர், ஸ்ரீபராசக்தி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், மாலை கோயில் வளைகாப்பு மண்டபத்தில் ஸ்ரீபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், வளைகாப்பு உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே தீ மிதி திருவிழா நடைபெறுகிறது. இத்துடன், இந்தக் கோயிலின் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
Leave a Comment