நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா 27 ஆம் தேதி கொடியேற்றம்


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் உள்ள காந்திமதியம்மன் சன்னதியில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் அம்மன் சன்னதியில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி ஜூலை 27 ஆம் தேதி காலை 6.15 முதல் 7.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன்பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற உள்ளது. இம் மாதம் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு காந்திமதியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். பத்தாம் திருநாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் இக் கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாளும், அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடுகளும் நடைபெற உள்ளன.



Leave a Comment