முருகன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் வருகை


மதுரையில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வானை, பவளக் கனிவாய் பெருமாள் ஆகியோர் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண ம் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுப்பதற்காக அருள்மிகு பவளக் கனிவாய் பெருமாளும் கடந்த 6 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற அவர்கள் தினமும் ஆவணி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரிடம் விடைபெறுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தெற்காவணி மூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதியம் சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
அதேசமயம் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதிகளில் வலம் வந்து, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் இரவு 9 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடைந்தார். சுவாமிகளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது.



Leave a Comment