அருணாசலேஸ்வரர் கோயிலில் மன்மத தகனம்...


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மன்மதனை தகனம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளில் இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அருணாசலேஸ்வரர் எய்த அம்பில் சிக்கிய மன்மதன் கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலானார்.
இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
எரிந்த மன்மதனின் சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் திருநீறாக பூசிக் கொண்டனர். இத்துடன், இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.



Leave a Comment