திருச்சி தாயுமானவர் கோவிலில் திருக்கல்யாணம்....


திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 6-வது நாளில் பகல் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலை கல்யாண மாப்பிள்ளையான தாயுமான சுவாமிக்கும், மணப்பெண்ணான மட்டுவார்குழலம்மைக்கும் மங்கள ஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது.தொடர்ந்து 11.30 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் 12 மணிக்கு மேல் திருக்கல்யாண சடங்குகள் நடந்தன. அதையடுத்து தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திரு நாணை தொட்டு வணங்கியவுடன் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment