மூன்று தேவிகள் கொலுவீற்றிருக்கும் சோட்டானிக்கரை


 

பொதுவாக இந்து மத ஆலயங்களில் நமக்கு தெரிந்த செய்திகளை விட தெரியாத அதிசயங்கள் அதிகம் உண்டு . ஒவ்வொரு பழங்கால கோவிலுக்கும் விசேஷமான சிறப்பம்சங்கள் நிச்சயம்இருக்கும் .அந்த வகையில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கும் ஒரு விசேஷம் உண்டு . இங்குள்ள  சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று தேவி வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையில்  சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையில் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும்  அருள் பாலிக்கிறாள் . எவர் ஒருவருக்கு  இந்த மூன்று  தரிசனங்களையும்  காண பேறு  அமைகிறதோ , அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை .

 

ஜெகத்குருவுக்கு அருளிய அன்னை

                                   

இதற்கு பின்னணியில் ஒரு புராண கதையும் சொல்லப்படுகிறது .

அத்வைத மதத்தை அன்னை கலைவாணியின் அருளால் தழைத்தோங்க செய்த ஜெகத்குரு சங்கராச்சாரியார் மைசூர் சாமுண்டீஸ்வரியை தனது  கேரளா தேசத்திற்கு எழுந்தருள  செய்ய  கடுமையான தவம்  மேற்கொண்டார் . தவத்திற்கு மெச்சி தன் முன் தோன்றிய தாயிடம் ,தனது விண்ணப்பத்தை வைத்தார் . கலைவாணியும்  அதற்கு இசைந்து அவருடன் வர  சம்மதித்து ஒரு நிபந்தனையையும்  வைத்தாள் . அதாவது முன்னே செல்லும் சங்கரர் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும் , அப்படி பார்த்தால்  தான் அங்கேயே தங்கிவிடும்படி நேரிடும் என்றாள் . சங்கரரும் ஒப்புக் கொண்டார் . சங்கரர் முன்னே செல்ல தனது சிலம்பின் ஒலி ஒலிக்க தாயும் அவரை பின் தொடர்ந்தாள் . ஒரு கட்டத்தில் சிலம்பின்  ஒலி கேட்காமல் போக சங்கரர் திரும்பி பார்க்கிறார் ஜகத்குரு . அந்த இடத்திலேயே தாய் நின்று விட்டாள் . அவள் நின்ற இடம் தான் தற்போதைய கொல்லூர் . அங்கு கொலுவீற்றிருக்கும் அன்னை மூகாம்பிகை .

தனது தவத்தின் பயன் இப்படி பாதிலேயே முடிந்து விட்டது சங்கரருக்கு வருத்தம் அளித்தது .அதனால் மீண்டும் அன்னையின் மனதை  மாற்றி தன்னுடன் அழைத்து செல்ல முயன்றார் . ஆனால் அன்னையோ சங்கரரின் வேண்டுதலை ஏற்று ஆலப்புழைக்கு  அருகில் உள்ள வேந்தநாட்டிற்கு எழுந்தருளுவதாக வாக்களித்தாள் . அதன்படி சோட்டானிக்கரையில் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் . சங்கரனுடன் ஜோதி ரூபத்தில் வந்த அன்னை ஆலயத்தினுள் ஜோதியாக கலந்ததால் ஜோதியானக்கரை பின்னாளில் சோட்டானிக்கரையானது என்றும் ஒரு வழக்கு உண்டு . இத்திருத்தலத்தில்  தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா என்று பக்தர்கள் அம்மையோடு சேர்த்து அப்பனையும் போற்றி பாடுகிறார்கள்.

 பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு உண்டு.

இத்தகைய அற்புதங்கள் நிறைந்த சோட்டானிக்கரை பகவதி அம்மனை நாமும் சென்று வழிப்பட்டு எல்லா நலன்களையும் அடைவோம் .



Leave a Comment