ராமானுஜர் சிலைக்கு புஷ்பாஞ்சலி சேவை
பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜயந்தியை முன்னிட்டு, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் உள்ள ராமானுஜர் சிலைக்கு பலவித மலர்களால் புஷ்பாஞ்சலி வழிபாடு நடத்தப்பட்டது.
வழிபாட்டுக்கு பின்னர், திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், தேவஸ்தான செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்தனர்.
முன்னதாக திருமலையில் ராமானுஜர் சாத்துமுறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைணவ மகா குரு ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தியையொட்டி, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. ராமானுஜரின் திருநட்சத்திர அவதார உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சாத்துமுறை நடைபெற்றது. இதையொட்டி ராமானுஜரின் சிலைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களை திருமலை ஜீயர் சுவாமிகள் நடத்தினார். விழாவையொட்டி, திருமலையில் ஞாயிற்றுக்கிழமை வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.
பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழாவையொட்டி கடந்த ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேசங்களுக்கு ராமானுஜர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திகளை கொண்ட சஞ்சார ரத ஊர்வலத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது. இந்த சஞ்சார ரத ஊர்வலம் கடந்த 30-ஆம் தேதியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
Leave a Comment