மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா...


அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் முக்கியத் திருவிழாவான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி, மே 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வாஸ்து சாந்தி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் காப்புக் கட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. கோயிலின் சுந்தரேசுவரர் சன்னதி முன்பு உள்ள கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சியம்மன் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு புனித நீர் தெளித்து மங்கல இசையுடன் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி-பிரியாவிடை மற்றும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தீப-தூப ஆராதனைகள் நடைபெற்றன.
கொடிமரத்தை சுவாமி-பிரியாவிடை, அம்மன் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்பட்டியில் எழுந்தருளினர்.
முதலாம் நாள் விழாவையொட்டி மாலையில் கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், சிம்ம வாகனகத்தில் மீனாட்சியம்மனும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் மே 5-ஆம் தேதியும், மே 6-இல் திக்குவிஜயம், மே 7-இல் திருக்கல்யாணம், மே 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.



Leave a Comment