தாயுமானவனுக்கே தாயான காரைக்கால் அம்மையார்
நடராஜர் உலகம் உய்யும் பொருட்டு நாட்டியமாடிய பஞ்ச சபைகளில், முதன்மையான தலம் என்று போற்றப்படுவது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். எப்படி நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, “சிதம்பர ரகசியம்’ என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. அதற்கு ஒரு சுவையான கதையும் உண்டு . சிவனைத் தரிசிக்க, கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் காரைக்கால் அம்மையார். சிவன் அவரை, “அம்மா!’ என்றழைத்து, “என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்க, அவர், “எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்…’ என்று கேட்க , அப்படியே வரத்தை அருளினார் சிவன்.
அம்மையின் மேல் ஆதுரம் கொண்ட எம்பெருமான், அவ்வூர் மன்னன் கனவில் தோன்றி, காரைக்கால் அம்மையார், தன் கோவிலில் தங்கப் போவதால் தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். தற்போதும், இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதை தான் “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.
இங்குள்ள அம்பாளின் விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ளதால், சமிசீனாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறாள் . “சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’ என்று அர்த்தமாம் .
பங்குனி உத்திரத்தன்றும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்றும் மட்டுமே நகருக்குள் உலா வரும் நடராஜர், பஞ்ச சபைகளில் இங்கு மட்டுமே எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.
ஒரு முறை காளியுடன் சிவன் போட்டி போட்டு நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன். இதனடிப்படையில் தான் சிவன் கோவிலாக இருந்தாலும், பெருமாள் கோவில்களைப் போல இங்கும் தீர்த்தம் தருகின்றனர் என்கிறார்கள் .
நடராஜரின் நடனத்தைப் பார்த்து அம்பாளே ஆச்சரியப்பட்ட திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் சென்று அற்புத தரிசனம் பெறுவோம் .
திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.
Leave a Comment