கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா வரும் 25ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அன்று மாலை கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு கூவாகம் கிராம வாசிகள் சார்பில் கூழ் குடங்களை கோயில் முன்பு படையல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு பின்னர் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்படும். 26ம் தேதி பந்தலடியில் உள்ள தெய்வநாயகம் தோப்பில் கிராம மக்கள் சார்பில் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், மகாபாரத சொற்பொழிவும் துவங்குகிறது. மே 7ம் தேதி காலையில் கூத்தாண்டவருக்கு பாலாலயம் நிகழ்ச்சியும், 8ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி மே 9ம்தேதி நடைபெறுகிறது. அன்று தான் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பகுதியில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தங்க, வைர நகைகள், பட்டுப்புடவை அணிந்து அழகு பதுமைகளாக வந்து கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள்.

தாலி கட்டியபிறகு புதுமணப் பெண்கள் போல் காட்சி அளிக்கும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் விடிய, விடிய கும்மி அடித்து கூத்தாண்டவரை தங்கள் கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். மே 10ம் தேதி காலை சித்திரை தேரோட்டமும், 11ம் தேதி விடையாத்தியும் நடைபெறுகிறது. 12ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைப் பெருவிழா நிறைவு பெறுகிறது.



Leave a Comment