ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்


ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் பிரம்மோற்சவம், வைணவ மகா குரு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார உற்சவம் கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் ஆதிகேசவ பெருமாள் மேளதாளம் முழங்க வலம் வந்தார்.
நிலையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்ட தேர், காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு வழியாக வந்து மீண்டும் மதியம் 1.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.



Leave a Comment