பண்ணாரி அம்மன் கோவிலில் தீ மிதித்த 2 லட்சம் பக்தர்கள்
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது புகழ் மிக்க பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதே போல் இந்தாண்டும் குண்டம் விழா கடந்த 27-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் பண்ணா மற்றும் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஒரு வாரத்துக்கு பிறகு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. பிறகு கோவிலில் கம்பம் சாட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் விஷேச பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குண்டம் விழா அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கியது. முன்னதாக நேற்று குண்டத்தில் எரி கரும்புகள் அடுக்கி வைக்கட்டு இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி வார்க் கப்பட்டது.
தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3 மணிக்கு குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தது. பிறகு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட கற்பூரம் ஜெகஜோதியாக பிரகாசமாக எரிந்தது. சரியாக 3.45 மணிக்கு பூசாரி ராஜசேகர் முதலில் குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து அம்மன் சப்பரத்துடன் பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
அதன் பிறகு பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.
ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். சிறுவர்- சிறுமிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தீ மிதித்தனர். பல பெண்கள் தங்கள் கை குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர்.
பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் கால் நடைகளான ஆடு- மாடுகள் மதியம் 1 மணி வரை குண்டம் இறங்கியது. கால் நடைகளுடன் விவசாயிகள் தீ மிதித்த காட்சியும் பரவசத்தை ஏற்படுத்தியது.
Leave a Comment