திருவண்ணாமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர மூலவர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் மூலவர் சந்நிதியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கல்யாணத்துக்கு புறப்பட்ட அம்மன்: இரவு 7 மணிக்கு தனது தாய் வீடான குமரக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் எழுந்தருளினார்.
பின்னர், திருக்கல்யாண உற்சவத்துக்காக ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலை நோக்கி மேளதாளங்களுடன் அம்மன் சென்றடைந்தார்.
மாலை மாற்றும் நிகழ்வு: இரவு 10.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் எழுந்தருளினார். இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் அருகே ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
நள்ளிரவு 12.30 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.



Leave a Comment