நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் வீதிஉலா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 63 நாயன்மார்களுடன் வீதிஉலா வந்த கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
சைவத் தலங்களில் முக்கிய தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 7ஆவது நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதில் மற்றொரு முக்கிய விழாவான அறுபத்து மூவர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கி கோலவிழி அம்மன், விநாயகர் உற்சவர்களைத் தொடர்ந்து, அறுபத்து மூவர் வீதியில் வலம் வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வெள்ளித் தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் காட்சியளித்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களுடன் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்தனர்.
பதினாறுகால் மண்டபத்தை இரவு 9.40 மணிக்கு அடைந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம்: அறுபத்து மூவர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் தனியார் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்டது.



Leave a Comment