திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி


பிரம்மோற்சவ விழா 9-வது நாளான நேற்று திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடந்து வந்தது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான சீதா, ராம, லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோர் எழுந்தருளி கோவிலில் இருந்து ஊர்வலமாக கபிலத்தீர்த்தம் புஷ்கரணிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு, உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை கபிலத்தீர்த்தம் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. அதில் பங்கேற்ற கோவில் அர்ச்சகர்கள், சக்கரத்தாழ்வாரை தண்ணீரில் மூன்று முறை மூழ்கி எடுத்தனர். அப்போது கபிலத்தீர்த்தத்தில் கூடியிருந்த திரளான பக்தர்களும் தண்ணீரில் மூழ்கி புனித நீராடினர்.
இதையடுத்து கபிலத்தீர்த்தத்தில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கோதண்டராமசாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். கோவிலில் உள்ள கொடிமரத்தின் அருகில் உற்சவ மூர்த்திகளை வைத்தனர். உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் இரவு 7 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

 



Leave a Comment