பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவை அருகே பேரூரில் அமைந்துள்ளது பட்டீசுவரர் கோவில். கோவையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் இந்த கோவிலும் ஒன்று. கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோபூஜை பின் காலை 6 மணிக்கு புற்றுமண் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பட்டி விநாயகர் கோவிலில் முளைப்பாலிகை பூஜை செய்யப்பட்டு பட்டீசுவரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கொடிமரத்தின் முன்பு 5 கலசங்கள் வைத்து யாக பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் விநாயகர், பட்டீசுவரர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், நந்திகேசுவரர், நடராஜர், சிவகாமி அம்பாள், பச்சைநாயகி அம்மன், சோமாஸ்கந்தர், பஞ்சமூர்த்திகள் மற்றும் அதிமூர்க்கம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டன. இதையடுத்து கொடிமரத்தில் கோனியாண்டி, லவண்டையார், தேனாரி ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொடிக்கு சிறப்பு பூஜை செய்து, கோவில் உள்பிரகாரம் வழியாக எடுத்து வரப்பட்டது. காலை 9.45 மணிக்கு கோவில் கொடிமரத்தில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றப்பட்டது. இதன் பின்னர் கொடிமரத்துக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைகளை செந்தில் ராஜா, சிவசண்முகசுந்தர குருக்கள் ஆகியோர் செய்தனர். கொடியேற்று விழாவில் கோவில் உதவி ஆணையர் சரவணன், சிவபக்தர் நலச்சங்க தலைவர் பேரூர் ராஜேந்திரன், செயலாளர் முத்துக்குமாரசாமி, பி.கே.என். பிரபுகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 2-ம் நாள் அன்று காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, இரவு 8 மணிக்கு சூர்யபிரபை சந்திரபிரபையில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து விழா நாட்களில் சிம்ம வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் போன்றவற்றில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
5-ந் தேதி மாலையில் திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 6-ந் தேதியும், 8-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Leave a Comment