ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மண்டல பிரம்மோற்சவம் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏப்ரல் 13-ந் தேதி வரை 42 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி 3 மற்றும் 4-ம் பிரகாரங்களில் 8 திசைகளிலும் உள்ள கொடிமரங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக 8 திசைகளிலும் ஏற்றப்படும் கொடிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் செய்யப்பட்டு கிழக்கு திசைக்கு யானை கொடியும், தென் கிழக்கு திசைக்கு ஆடு கொடியும், தென் திசைக்கு எருமை கொடியும், தென் மேற்கு திசைக்கு பூத கொடியும், மேற்கு திசைக்கு மகர கொடியும், வடமேற்கு திசைக்கு மான் கொடியும், வடக்கு திசைக்கு குதிரை கொடியும், வடகிழக்கு திசைக்கு இடப கொடியும் ஏற்றப்பட்டன.
28-ந் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி சுவாமி, அம்பாள் தனித்தனி பெரிய தேர்களில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி நிறைவடைகிறது.
இதைத்தொடர்ந்து மவுன உற்சவம், சண்டிகேசுவரர் உற்சவம், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 11-ந் தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி, அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். ஏப்ரல் 13-ந் தேதியுடன் விழா நிறை வடைகிறது.
Leave a Comment