திருச்செந்தூரில் மாசித் திருவிழா....


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஏழாம் நாளில் மாலையில் சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருக்கோயிலில், மாசித் திருவிழா மார்ச் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்று வருகிறது. ஆறாம் திருநாளான மார்ச் 6 ஆம் தேதி காலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி ,வீதியுலா நடைபெற்றது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன செந்தில் அருள்பணி கட்டளை மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் மற்றும் ஜெயந்திநாதர் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. ஏழாம் திருநாளான மார்ச் 7 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருக்கோயிலில் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் சண்முகவிலாச மண்டபத்திலிருந்து சுவாமி ஆறுமுக நயினார் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின், மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மார்ச் 8ஆம் தேதி எட்டாம் திருநாளை முன்னிட்டு அதிகாலை பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி, திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று, முற்பகல் 11.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.



Leave a Comment