திருவானைக்காவல் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்....


திருவானைக்காவல் கோயிலில் மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 28ம் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறுகிறது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் மண்டல பிரம்மோற்சவ விழா மார்ச் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 22ம் தேதி வரை 48 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. மார்ச் 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரம் அருகே வருகின்றனர். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பெரியக்கொடி ஏற்றப்படுகிறது. அதைதொடர்ந்து கணபதி, சுப்ரமணிய சாமிகளுக்கு உற்சவம் நடக்கிறது. மார்ச் 23ம் தேதி எட்டு திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா துவங்குகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடு, 2ம் நாள் சாமி அம்பாள் சூரியபிறை, சந்திரபிறை வாகனத்தில் வீதியுலா, 3ம் நாள் காலை பூதவாகனம், மாலையில் காமதேனு வாகனம், 4ம் நாள் காலை கைலாச வாகனம், மாலையில் கிளி வாகனம், 5ம் நாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். பங்குனி தேரோட்டத்தின் முதல் நாளான 27ம் தேதி தெருவடைச்சான் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 28ம் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது. சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளி 4ம் பிரகாரம் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 1ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைதொடர்ந்து சொக்கர் உற்சவம், மொனோத்சவம், சண்டிகேசுவரர் உற்சவம் நடக்கிறது. ஏப்ரல் 11ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடக்கிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 13ம் தேதியுடன் மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.



Leave a Comment